தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டியை பார்வையிட ரஷ்ய அதிபர் புதின், வரும் ஜனவரி மாதம் அலங்காநல்லூருக்கு வருகை தரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருடன் பிரதமர் மோடியும் விழாவில் பங்கேற்கவுள்ளார்.
ஜி&மோடி சந்திப்பு
சீன அதிபர் ஜி ஜின்பிங் கடந்த 7ம் தேதி தமிழகத்தில் மேற்கொண்ட சுற்றுப்பயணம், வரலாற்று நிகழ்வாக மாறி, உலகம் முழுவதும் அரசியல் தலைவர்களிடம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவும், வல்லரசு நாடுகளில் முதன்மை இடத்தை பிடிக்க போராடி வரும் சீனாவும் மிக நெருக்கமாக நட்பு பாராட்டி, ஒருமித்த உணர்வுடன் கருத்துகளை பரிமாறிக் கொண்டது, உலகளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. வரலாற்றுச் சிறப்புக் கொண்ட மாமல்லபுரம் நகரில் சீன அதிபருடன், இந்திய பிரதமர் மோடி மேற்கொண்ட முறைசாரா பேச்சுவார்த்தை, இந்திய அரசியலிலும் மட்டுமல்ல, ஆசிய கண்டத்திலும முக்கிய இடத்தைப் பிடித்தது.
ஜல்லிக்கட்டு திருவிழா
இந்தநேரத்தில், ஜல்லிக்கட்டு போட்டிக்கு மத்திய அரசு விதித்த தடையை எதிர்த்து சென்னை மெரினாவில் தொடங்கிய போராட்டமும், அதனைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் மக்கள் தன்னெழுச்சியாக எழுந்து குடும்பம் குடும்பமாக மக்கள் பலநாள்கள் போராடியதும், உலகளவில் பரபரப்பாக பேசப்பட்டது. 7 கோடி மக்களின் ஒட்டுமொத்த உணர்வுக்கு அடிப்பணிந்து ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்க மத்திய அரசு அவசர சட்டத்தையையே நிறைவேற்றியது. இதன் மூலம் உலகளவிலான வரலாற்றுப் போராட்டங்களில் ஜல்லிக்கட்டு போராட்டமும் இடம் பிடித்தது. இப்படி சிறப்புமிக்க போராட்ட வரலாறு கொண்ட ஜல்லிக்கட்டு திருவிழாவுக்கு மேலும் பெருமை சேர்க்கும் விதமாக, தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டுப் போட்டியை காண, ரஷிய அதிபர் புதின், வரும் ஜனவரி மாதம் தமிழகம் வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஷிய அதிபர் புதின்
ஜல்லிக்கட்டு விளையாட்டுப் போட்டிக்கு புகழ்பெற்ற மதுரை மாவட்டத்தில் உள்ள அலங்காநல்லூருக்கு ரஷிய அதிபர் புதின் வரவுள்ளளதாக மத்திய அரசு அதிகாரிகள் வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளது. வரும் ஜனவரி மாதம் பொங்கல் திருவிழாவையொட்டி நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியைக் காண வரும் புதினை வரவேற்கவும், அவருடன் இணைந்து போட்டியை ரசிக்க பிரதமர் மோடியும் சம்மதித்துள்ளார். வெளிநாட்டு தலைவர் வருகை, அவரது பயண ஏற்பாடு, அவரது நிகழ்ச்சி நிரல்கள் உறுதிசெய்யப்பட்டவுடன் ரஷிய அதிபரின் வருகை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வட்டாரம் தகவல் தெரிவிக்கிறது.
வரலாற்றுச் சிறப்பு
மாமல்லபுரத்திற்கு சீன அதிபர் வருகை தந்ததையடுத்து, அவரின் தமிழகப் பயணம் உலகம் முழுவதும் சிறப்புப் பெற்றதைப் போல, ரஷிய அதிபர் புதின் வருகை மூலம் அலங்காநல்லூரும், தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டியும் உலகளவில் வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாக மாறும். அதன் மூலம் தமிழர்களின் பண்பாடு உலக நாகரிகத்தில் முக்கிய இடம் பிடிக்கும் என்று தமிழக அரசின் உயரதிகாரி ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.